Indian Railways News => Topic started by railgenie on Jul 03, 2013 - 18:02:26 PM


Title - வைகை எக்ஸ்பிரசில் வெடிகுண்டு புரளி
Posted by : railgenie on Jul 03, 2013 - 18:02:26 PM

திருச்சி, ஜூலை 3: மதுரையில் இருந்து இன்று காலை சென்னைக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அந்த ரெயில் திருச்சியில் நிறுத்தப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது  பயணிகள் அதிரடியாக இறக்கிவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.
மதுரையில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றுக் கொண்டு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்  சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயில் திருச்சியை நெருங்குவதற்குள், திருச்சி ரெயில்வே சந்திப்பு அலுவலகத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

சில நொடிகளில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த வாலிபர், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி ரெயில் சந்திப்பை வந்தடைந்ததும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்துவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதனால் ரெயில்வே அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ரெயில் சில நிமிடங்களில் திருச்சி சந்திப்பை வந்தடைந்துவிடும் என்பதால்  பெரும் பீதியும் ஏற்பட்டது. இதற்கிடையில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் கருவிகளுடன் திருச்சி  சந்திப்பில் வெடிகுண்டு நிபுணர் முரளி தலைமையில் போலீசார் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 9 மணிக்கு திருச்சி ரெயில்வே சந்திப்பை வந்தடைந்ததும். பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு வெளியேறுமாறு  ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் கிடைத்ததும் குளிர்சாதன ரெயில் பெட்டியில் படுத்து இருந்தவர்கள் உள்பட அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.  இதனால் ரெயில்வே சந்திப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில் முழுவதும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேர சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என தெரியவந்தது.

இதனால் ரெயில் போக்குவரத்தில் காலதாமதம்  ஏற்பட்டது. இதனால் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் ரெயில்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தன. வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரெயில்வே மற்றும் திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருந்து மதுரையைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரது செல்போனில் இருந்து வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அல்லது  அவரது சிம்கார்டை பயன்படுத்தி  வேறு யாராவது மிரட்டல் விடுத்தனரா என்பது  குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.