Indian Railways News => Topic started by greatindian on Oct 03, 2013 - 00:00:44 AM


Title - மும்பைக்காக சென்னையில் தயாரான நவீன ரயில் பெட்டிகள்
Posted by : greatindian on Oct 03, 2013 - 00:00:44 AM

சென்னை: மும்பை புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்காக, சென்னை, ஐ.சி.எப்., தொழிற்சாலையில், ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.

மும்பை ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் மூலம், மும்பையில் இரண்டாவது கட்ட, புறநகர் மின்சார ரயில்கள் போக்குவரத்திற்கு, 4,174 கோடி ரூபாய் செலவில், 301 நவீன ரயில் பெட்டிகள், சென்னை, ஐ.சி.எப்,,பில் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக, 129 பெட்டிகள் முன்பே வழங்கப்பட்டுவிட்டன. தற்போது, நவீன தொழில்நுட்பத்தில், 72 ரயில்களுக்கான புறநகர் மின்சார ரயில் பெட்டிகள், நாட்டில் முதல் முறையாக, ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் ரயிலுக்கான, 12 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, மும்பை ரயில் விகாஸ் கார்ப்பரேஷனுக்கு நேற்று வழங்கப்பட்டது. அப்போது, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா பேசுகையில், "இந்த ரயில் பெட்டிகள், மும்பையில் இன்னும் ஒரு வாரத்தில், போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும்," என்றார். மும்பை ரயில் விகாஸ் கார்ப்பரேஷன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, ராகேஷ் சக்சேனா பேசுகையில், "இப்பெட்டிகள் முழுவதும் ஸ்டெயின்லஸ் ஸ்டீலாலும், அலுமினிய உட்கட்டமைப்புகளுடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. காற்றோட்ட வசதிக்காக, அகலமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரயில் நிலையங்களின் பெயரை, 'எலக்ட்ரானிக் டிஸ்பிளே போர்ட்'டின் இருபக்கத்திலும், பயணிகள் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. ஒரு ரயிலில், 1,168 பேர் உட்கார்ந்தும், 4,862 பேர் நின்றபடியும் என, மொத்தம் 6,030 பேர் வரை பயணம் செய்யலாம்," என்றார்.