Indian Railways News => Topic started by Mafia on Sep 29, 2013 - 17:59:20 PM


Title - நாகர்கோவில் ரயில் நிலைய ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பயணிகள் தவிப்பு
Posted by : Mafia on Sep 29, 2013 - 17:59:20 PM

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில், ஊழியர்களிடையே நிலவும் "ஈகோ' பிரச்னையால், வேலை
நிறுத்தம் நடந்தது. இதனால், பல மணி நேரம் ரயில்கள் தாமதமானது. நாகர்கோவில் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைந்துள்ளது. இங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால், அடிக்கடி ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது. இப்போது, முதல் முறையாக ஊழியர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள "ஈகோ' காரணமாக, 10 க்கும் அதிகமான ரயில்கள் தாமதமானது. ரயில்களில் இஞ்ஜினை இணைப்பது யார்? என்பது தான் இப்போதைய பிரச்னை. அது, டிரைவர்களின் பணி என மெக்கானிக் துறையினரும், மெக்கானிக் துறையினரின் பணி என டிவைர்களும் கூறி வருகின்றனர். இந்த "ஈகோவுக்கு' முதல் பலி அனந்தபுரி ரயில். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு நாகர்கோவில் வந்த ரயில், 10 நிமிடங்களில் புறப்பட்டிருக்க வேண்டும். இஞ்ஜினை மாற்றுவதில் ஏற்பட்ட இழுபறி முடிய, ஒரு மணி நேரமானதால், ரயில் தாமதமாக புறப்பட்டது. இதே பிரச்னையால், நேற்று முன்தினம் இரவு 10.30 க்கு வந்த குருவாயூர் ரயில், நேற்று அதிகாலை 1.15 க்கும், மதுரை -கொல்லம் ரயில், அதிகாலை 4.35 க்கு பதிலாக, காலை 7.35 க்கும் புறப்பட்டது. மறுமார்க்கத்தில் கொல்லம்- மதுரை ரயில் இரவு 11 மணிக்கு பதிலாக, அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டது.
மேலும், குருவாயூர்- சென்னை ரயில், காலை 5.50 க்கு பதிலாக காலை 7.55 க்கும்,சென்னை - கன்னியாகுமரி ரயில், காலை 6.10 க்கு பதிலாக 8.40க்கும் வந்தது. நேற்று காலை அனைத்து ரயில்களுமே 2 முதல் 4 மணி நேரம் தாமதமானது. இதனால், கோபமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி எம்.பி. ஹெலன் டேவிட்சன் ரயில் நிலைய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். எனினும், நிலைமை சீராகவில்லை. மாலையிலும், ரயில்கள் சில மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டு சென்றன.
இந்த "ஈகோ' பிரச்னை சங்கங்களிலும் உள்ளதாக தெரிகிறது. டிரைவர்கள் ஒரு சங்கத்திலும்,மெக்கானிக் ஊழியர்கள் மற்றொரு சங்கத்திலும் இருப்பதால், 2 சங்கங்களும் தங்களது பலத்தை காட்ட நினைப்பதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்படுவது பயணிகள் தான்