Indian Railways News => Topic started by riteshexpert on Oct 19, 2012 - 06:00:32 AM


Title - தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர்கேஜ் பாதை மூடல் : திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயிலுக்கு குட் பை
Posted by : riteshexpert on Oct 19, 2012 - 06:00:32 AM

திருச்சி: அகலப் பாதை பணிகள் நடக்க உள்ளதையொட்டி, திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை இன்று மூடப்படுகிறது. இது தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர்கேஜ் பாதையாகும்.நாடு முழுவதும் ரயில் பாதைகளை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் பெரும்பாலான பாதைகள் அகலப் பாதையாக மாற்றப்பட்டுவிட்டன. திருச்சி மற்றும் மதுரை கோட்ட பகுதிகளில் உள்ள காரைக்குடி - திருவாரூர் வரை மீட்டர் கேஜ் பாதையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் இருந்து, பட்டுக்கோட்டை வரை மீட்டர்கேஜ் பாதை மூடப்பட்டு அகலப்பாதை பணிகள் நடந்து வருகின்றன.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டை வரை (77 கி.மீ. ) மீட்டர் கேஜ் பாதையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த மீட்டர்கேஜ் பாதைதான் தெற்கு ரயில்வேயின் கடைசி மீட்டர்கேஜ் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.இன்றுடன் திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையிலான இந்த மீட்டர்கேஜ் ரயில்பாதையும் மூடப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழியே இயங்கி வந்த, திருவாரூர் & திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் -பட்டுக்கோட்டை பயணிகள் ரயில் இன்றுடன் தனது பணியை நிறைவு செய்து பிரியா விடைபெறுகின்றன.

திருவாரூரில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு மீட்டர் கேஜ் ரயில் தனது கடைசி பயணத்தை தொடங்குகிறது. இது 8.45 மணிக்கு திருத்துறைப்பூண்டி வந்தடைந்து ஓய்வு பெறுகிறது. பட்டுக்கோட்டை மார்க்கத்தில் மாலை 3.30 மணிக்கு கடைசி ரயில் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருவாரூர் வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்து கொள்கிறது.ஊட்டி ரயில்மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையிலான மலை ரயிலும் மீட்டர்கேஜ் பாதையிலேயே இயக்கப்படுகிறது. அதை அகலபாதையாக மாற்றுவது கடினம் என்பதால் அதை மாற்ற முடியாது. அதே நேரத்தில் மற்ற இடங்களில் இயக்கப்படும் மீட்டர்கேஜ் ரயில் பெட்டிகளை ஊட்டி மலைப்பாதையில் இயக்க முடியாது. அதற்கென்று விசேஷ பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.