Indian Railways News => Topic started by RailXpert on Aug 22, 2013 - 05:57:38 AM


Title - தஞ்சை அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரெயில்கள் தாமதம்
Posted by : RailXpert on Aug 22, 2013 - 05:57:38 AM

தஞ்சாவூர், ஆக.21–

தஞ்சை அருகே ஆலக்குடி ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை ரெயில்வே ஊழியர்கள் பார்த்தனர். இதனை தொடர்ந்து விரிசல் சரி செய்யப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டது.

இன்று காலை மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம போல் சென்றது. இதன் பிறகு திருச்சியில் இருந்து தஞ்சைக்கு ராக்போர்ட்டு ரெயில் வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

அப்போது ஆலக்குடி ரெயில் நிலைய ஊழியர்கள் தண்டவாள இணைப்பில் திடீர் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக திருச்சி ரெயில்வே மண்டல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ராக்போர்ட்டு ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு ஆலக்குடிக்கு வந்தது. அப்போது அங்கு உள்ள தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட விரிசலை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனால் ராக்போர்ட்டு ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் விரிசல் சரி செய்த உடன் ராக்போர்ட்டு ரெயில் ஆலக்குடியில் இருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு 7.20க்கு தஞ்சை வந்தது.

இதனால் ரெயில்வே பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல் திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், தஞ்சையில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு வழக்கத்திற்குமாறாக 30 நிமிட காலதாமதத்திற்கு பிறகு புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு சென்றது.

இதனால் அந்த ரெயில்களில் பயணித்த பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு பணிக்கு செல்லும் பொது மக்கள் பஸ்களில் தங்களது பயணத்தை தொடங்கினர்.

இது குறித்து ஆலக்குடி ரெயில்வே நிலைய ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:–

இன்று காலை 5.25 மணிக்கு ஆலக்குடி தண்டவாளம் இணைப்பில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் பார்த்து அந்த ரெயில்வே நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தஞ்சை, திருச்சி ரெயிவே நிலையத்தில் இருந்து ஊழியர்கள் உடனே வரவழைக்கப்பட்டு விரிசல் சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் வழக்கம் போல் ரெயில்கள் இயங்க தொடங்கின.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்று காலை ஏற்பட்ட இந்த விரிசல் காரணமாக ஆலக்குடி ரெயில் நிறுத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.