Indian Railways News => Topic started by TrustMe on Oct 08, 2013 - 03:00:23 AM


Title - ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி: 650 மாணவ, மாணவியர் பங்கேற்பு
Posted by : TrustMe on Oct 08, 2013 - 03:00:23 AM

ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி: 650 மாணவ, மாணவியர் பங்கேற்பு
By dn, புதுச்சேரி
First Published : 07 October 2013 04:09 AM IST
புகைப்படங்கள்
புதுவை-விழுப்புரம் பயணிகள் ரயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.
புதுவை-விழுப்புரம் பயணிகள் ரயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.
புதுச்சேரி-விழுப்புரம் பயணிகள் ரயிலில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 650 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளிடம் ஓவியக் கலையைத் தூண்டும் வகையிலும் ஆண்டுதோறும் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் புதுவைச் சேர்ந்த 48 பள்ளிகளில் இருந்து 650 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சட்டப்பேரவைத் தலைவர் சபாபதி தலைமை வகித்தார். போட்டிகளை அமைச்சர்கள் தியாகராஜன், பன்னீர்செல்வம், அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர். புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஓவியர் மன்றத் தலைவர் இபேர் விதிகளை விளக்கிக் கூறினார்.

புதுச்சேரி ஓவிய நுண்கலை குழுத் தலைவர் மாலதி ராஜவேலு குழந்தைகள் வரைவதற்கான பொருள்களை வழங்கினார்.

அனைவருக்கும் ரயிலில் அச்சடித்த கோட்டுப்படம் வழங்கப்பட்டது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி பட்டதாரிகளாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கோட்டுப்படம் வைக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் இருந்து மாலை 3.30 மணியளவில் ரயில் புறப்பட்டவுடன் போட்டி தொடங்கியது. ரயிலின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர் ஓவியங்களை வரைந்து அசத்தினர்.

4.50 மணிக்கு ரயில் விழுப்புரத்தை அடைந்தது. விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர் பிரேம் லகேரா மாணவர்களை வரவேற்று சான்றுகள், சிற்றுண்டி போன்றவற்றை வழங்கினார். புதுவை, காரைக்கால், சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

65 ஆசிரியர்களும், 20 என்.எஸ்.எஸ். மாணவர்களும், 2 செவிலியரும் போட்டி நடத்தும் பணியில் ஈடுபட்டனர். ஓவியர்கள் எமில், குலசேகரன், ரிச்சர்ட், ராமலிங்கம், சுகுணா, ஜெயலட்சுமி, புதுவை, விழுப்புரம் ரயில் நிலைய அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறும்.