Indian Railways News => Topic started by puneetmafia on Sep 18, 2012 - 15:01:17 PM


Title - 23 year Old compartment in Vaigai Express
Posted by : puneetmafia on Sep 18, 2012 - 15:01:17 PM

மதுரை: வெளியிடங்களுக்கு குடும்பத்தினருடன் செல்ல பயணிகள் பெரும்பாலும் ரயில்களையே நாடுகின்றனர். ஏற்கனவே ரயில் பெட்டிகளில் நிலவும் நெரிசல், கரப்பான், பூச்சி தொந்தரவுகளால் பயணிகள் புலம்பி தவிக்கின்றனர். இந்நிலையில் "ஏசி'யும் செயல்படாததால், தவிப்புக்குள்ளாகினர். டிக்கட் பரிசோதகரை முற்றுகையிட்டு அதிருப்தியை வெளிகாட்டவும் தவறவில்லை. இச்சம்பவம் மதுரையிலிருந்து சென்னை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்., 16ல் நடந்தது.
மதுரையிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 6.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. அலுவல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்வோர் இதில் அதிகம் பயணிக்கின்றனர். இந்த ரயிலில் இரு ஏசி சேர் கார்கள், இரு சரக்கு பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார் உட்பட 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். ஏற்கனவே இந்த ரயிலில் கரப்பான், எலி, பூச்சி தொந்தரவு இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். தெற்கு ரயில்வே ரோலிங் ஸ்டாக் தலைமை பொறியாளர் வெங்கடசுப்ரமணியன், கரப்பான், பூச்சிகளை ஒழிக்க உத்தரவிட்டார். அதன்படி பராமரிப்பு பிரிவு செக்ஷன் இன்ஜினியர் வனராஜா தலைமையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

டிக்கட் பரிசோதகர் முற்றுகை: தற்போது கரப்பான், பூச்சி தொந்தரவுகள் குறைந்த நிலையில், சமீபகாலமாக "ஏசி' செயல்படாததால், பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். நேற்று முன் தினம் மதுரையில் புறப்பட்டதிலிருந்தே வைகை ரயிலில் "ஏசி' செயல்படவில்லை. கொதிப்புற்ற பயணிகள், டிக்கட் பரிசோதகரை முற்றுகையிட்டு, புகார் தெரிவித்தனர். அவரும் "ஏசி' பராமரிப்பு ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சரி செய்தும், "ஏசி' இயங்கவில்லை. வேறுவழியின்றி பயணிகள் டிக்கெட்டில் "ஏசி'க்கான கட்டணத்தை குறைக்க ரயில்வே அலுவலர்கள் முன்வந்தனர். இதுகுறித்து பயணிகளுக்கு டிக்கெட்டில் எழுதி கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை டிக்கெட் கவுன்டரில் கொடுத்து "ஏசி' கட்டணத்தை மட்டும் திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

அடிக்கடி பழுது ஏன்: ரயில்வே பராமரிப்பு பிரிவு பொறியாளர்கள் கூறியதாவது: காலை 8 மணிக்கு நன்றாக வெயில் அடிக்கிறது. ரயிலில் தொடர்ந்து "ஏசி' செயல்படுகிறது. இதனால் அடிக்கடி பழுதாக வாய்ப்புள்ளன. வைகை ரயிலில் அடிக்கடி "ஏசி' பழுதாகும் சேர்கார் 1989 ஆண்டு தயாரிக்கப்பட்டது. 23 ஆண்களாக அந்த பெட்டி பயன்பாட்டில் உள்ளது. மாற்று "ஏசி' சேர்கார்கள் இல்லை. இதனால் பிரச்னை ஏற்படுகிறது. தற்போது பழுதான "ஏசி' சேர் காரை சரி செய்து வருகிறோம். அதற்கு பதிலாக "ஏசி' சிலீப்பர் வசதி பெட்டி வைகையில் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக "ஏசி' சேர்கார்களை மதுரை கோட்டத்திற்கு வழங்க, ரயில்வே நிர்வாகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.