Indian Railways News => Topic started by greatindian on Aug 02, 2012 - 08:00:30 AM


Title - மின் கசிவால் ரயிலில் தீ பிடிக்கவில்லை
Posted by : greatindian on Aug 02, 2012 - 08:00:30 AM

32 பேரை பலி வாங்கிய கோர விபத்து
மின் கசிவால் ரயிலில் தீ பிடிக்கவில்லை
சித்தூர், ஆக. 2:
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 32 பயணிகள் உயிரை பலி வாங்கிய தீ விபத்துக்கு மின் கசிவு காரணமல்ல என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது, எஸ்&11 பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 32 பயணிகள் கருகி பலியாகினர். இந்த பெட்டியில் 72 பயணிகள் முன்பதிவு செய்து இருந்ததாகவும், அதில் விஜயவாடாவை சேர்ந்த 5 பேரும், நாக்பூரை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்யவில்லை. ஆனால், பெட்டியில் 83 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், 5 பேர் டிக்கெட் இன்றி பயணம் செய்துள்ளனர். இவர்களிடம் பணம் வாங்கி கொண்டு பயணம் செய்ய அனுமதித்ததாக டிக்கெட் பரிசோதகர் சமன காந்த்தை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விபத்து நடந்த இடத்தை கடந்த 2 நாட்களாக ரயில்வே மின் துறை நிபுணர் குழு ஆய்வு செய்தது. இதன் அறிக்கையை நேற்றிரவு ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் டி.கே. சிங்கிடம் ஒப்படைத்தது. அதில், ‘தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் அல்ல. இருக்கை எண் 40&ல் தொடங்கி 22ம் எண் வரை முதலில் தீ பரவி, அதன் பின் பெட்டி முழுவதும் பரவியுள்ளது. 40ம் எண் இருக்கையின் கீழ் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இடத்தில் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், ரசாயனம் அல்லது வெடி மருந்து பொருட்களை யாராவது வைத்து இருக்கலாம். தீ ஏற்பட்ட 4 நிமிடத்திலேயே பெட்டி முழுவதும் பரவி பயங்கரமாக எரிந்தது என்றும், அதற்கு முன்பாக 3 முறை வெடி சத்தம் கேட்டது என்றும் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர்� என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் டி.கே. சிங் தலைமையிலான குழு, நெல்லூரில் இன்றுதான் முறைப்படி தனது விசாரணையை தொடங்க உள்ளது.
இப்படி நடந்திருக்குமா?
மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் போன்றவற்றால் தீ விபத்து ஏற்பட்டால் உடனே தீ மளமளவென பரவும். மேற்கண்ட பொருட்களை காற்று புகாதபடி அடைத்து கொண்டு சென்றால், சூடு அதிகமாகி தானாகவே வெடிக்கும். கன் பவுடர், பொட்டாசியம், சல்பர் போன்ற ரசாயன பொருட்களால் விபத்து ஏற்பட்டால் தீ வேகமாக பரவுவது மட்டுமின்றி, புகையும் அதிகமாக இருக்கும். ஜெலட்டின், டைனமைட், ஆர்டிஎக்ஸ், டிஎச்டி, அமோனியம் நைட்ரேட் போன்றவற்றால் விபத்து ஏற்பட்டால், பயங்கர வெடி சத்தத்துடன் மிகபெரிய அளவில் தீ விபத்தும் ஏற்படும். எனவே, தமிழ் நாடு எக்ஸ்பிரசில் இதுபோன்ற பொருட்களை யாராவது கொண்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது சாதாரணமாக நடந்ததா? அல்லது நாசவேலை காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.