Indian Railways News => Topic started by AllIsWell on Sep 23, 2012 - 15:00:55 PM


Title - நேற்று வந்தது மும்பை எக்ஸ்பிரஸ் இன்று வருகிறது ஆழப்புழா!கோவை ரயில்வே ஸ்டேஷனில் தொடரும் கோலாகலம்
Posted by : AllIsWell on Sep 23, 2012 - 15:00:55 PM

கோவை:நீண்ட இடைவெளிக்குப் பின், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த மும்பை-திருவனந்தபுரம் ரயிலுக்கு, அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் சென்ற 13 ரயில்களை, கோவைக்குத் திருப்ப வேண்டுமென்று, கோவை ரயில்வே போராட்டக் குழு பல விதமான போராட்டங்களை நடத்தியது.இதன் பலனாக, கடந்த மார்ச் 15லிருந்து பிலாஸ்பூர்-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாகச் சென்று வருகிறது. இரண்டாவது ரயிலாக, மும்பை-திருவனந்தபுரம் வாராந்திர ரயில், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று வந்தது.
நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்த இந்த ரயிலை, ரயில்வே போராட்டக் குழுவினர் மற்றும் கோவை ரயில்வே பயணிகள் சங்கத்தினர், வரவேற்றனர். இந்த ரயில், வாரந்தோறும் சனிக்கிழமை மதியம் கோவைக்கு வந்து, ஞாயிறு மாலையில், மும்பை விக்டோரியா முனையத்தை அடையும்.புதன்கிழமை மதியம் 5.15 மணிக்கு, மீண்டும் கோவை வரும் இந்த ரயில், மறுநாள் காலை 4.00 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
போத்தனூரிலிருந்து கோவைக்குத் திருப்பி விடப்பட்டுள்ள இவ்விரு ரயில்களுமே வாராந்திர ரயில்கள்தான்.இன்று காலை 9.30 மணிக்கு, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும், சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், தினசரி ரயில் என்பதால், கோவை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை செல்லவும், சென்னையிலிருந்து கோவை வருவதற்கும் இந்த ரயில் பெரிதும் பயனளிக்கும். ஆலப்புழாவிற்கு கூடுதலாக 50 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தால், கோவைக்கு வரும் 400 பேருக்கு "பெர்த்' கிடைக்கும் வாய்ப்புள்ளது.
6ம் தேதி முதல்... அடுத்ததாக, வரும் 6ம் தேதியிலிருந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, மங்களூரு-புதுச்சேரி வாராந்திர ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், சனிக்கிழமை இரவு 12.00 மணிக்கு கோவை வரும்; மறுநாள் காலை 8 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பயணச் செலவை, இந்த ரயில் குறைக்கும்.