Indian Railways News => Topic started by railenquiry on Nov 14, 2012 - 08:00:04 AM


Title - நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் விரிவாக்கப்படும் கலெக்டர் நாகராஜன் தகவல்
Posted by : railenquiry on Nov 14, 2012 - 08:00:04 AM

நாகர்கோவில்,-

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் விரிவாக்கப்படும் என கலெக்டர் நாகராஜன் கூறினார்.

பயணிகளுக்கான வசதிகள்
குமரி மாவட்டத்தில் பெரிய ரெயில் நிலையமாகத் திகழ்வது நாகர்கோவில் சந்திப்பு (கோட்டார்) ரெயில் நிலையம். குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் (ஹப்பா, பிலாஸ்பூர் ரெயில்கள் தவிர) நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.இதனால் வர்த்தக ரீதியாக இந்த ரெயில் நிலையம் அதிக வருவாயை ரெயில்வேத் துறைக்கு பெற்றுத்தருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரித்து மேம்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே, பள்ளவிளை டவுன் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மாறாக, பார்வதிபுரத்தில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

விரிவாக்கம்
இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் சந்திப்பு ரெயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் நாகராஜன் தெரிவித்தார். விரிவாக்கத்துக்கு ரெயில் நிலையத்தின் வயலோர பகுதிகள் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது.இதுபற்றி கலெக்டர் மேலும் தெரிவிக்கையில்,“பள்ளிவிளை டவுன் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படலாம். ஆனால் பார்வதிபுரத்தில் ரெயில் நிலையம் அமைய வாய்ப்பில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்“ என்றார்.