Indian Railways News => Topic started by nikhilndls on Oct 31, 2012 - 15:00:16 PM


Title - சென்னை: மழையால் தண்டவாளம் விரிசல், சிக்னல் கோளாறு - ரெயில்கள் தாமதமாக வந்தன
Posted by : nikhilndls on Oct 31, 2012 - 15:00:16 PM

புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டு மிதமான வேகத்தில் செல்லுமாறு டிரைவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், பெரம்பூர் நிலையங்களுக்கு இன்று அனைத்து ரெயில்களும் அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன.

செங்கல்பட்டு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சிறிது நேரம் வழியில் நிறுத்தப்பட்டன. மழையால் சிக்னல் கேபிள் கோளாறு, ஏற்பட்டதாலும் எழும்பூருக்கு தாமதமாக ரெயில் வந்து சேர்ந்தன. ஐதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே வந்தபோது ஏ.சி. பெட்டியில் ஏற்பட்ட கோளாறால் நடு வழியில் நின்றது.

இதையடுத்து பின்னால் வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சர்க்கார் எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து ஏ.சி. பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். பின்னர் ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு தாமதமாக வந்து சேர்ந்தது.

இதையடுத்து வட மாநிலங்களில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை நேற்றிரவு திடீரென பாதித்தது. கோடம்பாக்கம் அருகில் மின் வயரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மின்சார ரெயில்கள் இரவு 8 மணி அளவில் நடு வழியில் நின்றன. கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் 45 நிமிடங்கள் மின்சார ரெயில் சேவை பாதித்தது.