Indian Railways News => Topic started by ConfirmTicket on Dec 22, 2012 - 09:00:24 AM


Title - தமிழகத்தில் ரயில்வே திட்டப் பணிகள் : டி.ஆர். பாலு வலியுறுத்தல் - Dinamani - Tamil Daily News
Posted by : ConfirmTicket on Dec 22, 2012 - 09:00:24 AM

தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில் பணிகள் குறித்து திமுக நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், திமுக நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டி.ஆர். பாலு, எம்.பி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதைகள், இரட்டைப் பாதைகள், புதிய ரயில்கள், மேம்பாட்டுப் பணிகள், நிதி ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புது தில்லியில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலை சந்தித்து மனு அளித்தார்.  ரயில்வே வாரிய தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பாலு அவர்களின் கோரிக்கைகளை அடுத்த நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சேர்த்துக் கொள்வதாக அப்போது அமைச்சர் பவன்குமார் பன்சல் உறுதியளித்தார்.

டி.ஆர். பாலு அளித்த மனுவில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு :

புதிய  அகல ரயில்பாதை திட்டங்கள் : தஞ்சாவூர்-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை, ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, அத்துடன் இருங்காட்டுக் கோட்டைக்கு இணைப்பு, மொரப்பூர்-தர்மபுரி,       பேரளம்-காரைக்கால், அரியலூர்-தஞ்சாவூர்.

புதிய இரட்டை ரயில் பாதை திட்டங்கள் :

மதுரை-கன்னியாகுமரி (245 கிலோமீட்டர்), சேலம்-ஓமலூர் (11 கிலோமீட்டர்).

புதிய ரயில்கள் :

மன்னார்குடி-தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி-ஈரோடு-திருப்பூர்-கோவை (தினசரி),   சென்னை-திருவாரூர்-வேளாங்கண்ணி (தினசரி), காரைக்குடி-புதுக்கோட்டை-திருச்சிராப்பள்ளி-சென்னை (தினசரி பகல்நேர எக்ஸ்பிரஸ்)  திருக்குறள் எக்ஸ்பிரஸ் (சேவை நாட்களை அதிகரித்தல்)

சிறு மேம்பாட்டு திட்டங்கள்  :

சாத்தான்குளத்தில் ஆளுடன் கூடிய லெவல்கிராசிங் (நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்), திருவொற்றியூர் ரயில் நிலைய நடைமேடை நீட்டிப்பு, ராயபுரம் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக மேம்படுத்துதல், நீலகிரி மலை ரயிலை பாரம்பரிய ரயிலாக மேம்படுத்துதல்.

திட்ட விரிவாக்கம் :

புகழ்மிக்க திருச்சி தங்கமலை ரயில்வே பணிமனை அதன் முழுத் திறனுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அதனை  வேகன் தயாரிப்பு தொழிற்சாலையாகவோ, ரயில்பெட்டி தொழிற்சாலையாகவோ மாற்றுதல்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்ஜெட்டில் அறிவித்தபடி, சென்னை ஐ.சி.எப். ரயில்பெட்டி தொழிற்சாலையில் இரண்டாவது உற்பத்திப் பிரிவு உரிய முதலீட்டுடன் உடனடியாக நிறுவப்பட வேண்டும்.

புதிய ரயில் பெட்டிகள் :

தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் மிகவும் பழையதாகவும், மோசமான நிலையிலும் உள்ளன. அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும்.

இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவரும், ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சலிடம் வழங்கினார்.

இம்மனுவை ரயில்வே வாரியத்துடன் பரிசீலித்து ஆவன செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்