Indian Railways News => Topic started by AllIsWell on Nov 15, 2012 - 06:00:40 AM


Title - southern railway invited TN Mps for their demand | ரயில்வே தேவைகளுக்கு குரல் கொடுக்க நல்ல வாய்ப்பு :
Posted by : AllIsWell on Nov 15, 2012 - 06:00:40 AM

கோவை: தெற்கு ரயில்வே நடத்தும் முக்கிய கூட்டத்தில், சேலம் கோட்ட எம்.பி.,க்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டுமென்ற கருத்து வலுத்துள்ளது.கேரளாவில் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், மாநிலத்தின் நலன்கருதி அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் ஒன்றாக போராடுகின்றனர். தமிழக எம்.பி.,க்களிடம் ஒற்றுமை இல்லாததால், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் மீதான புறக்கணிப்பு அதிகரித்துள்ளது.
சாதாரண ரயில்வே கோரிக்கைகளைக் கூட, போராடிப் பெற வேண்டிய அவலத்தில் தமிழக மக்கள் உள்ளனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின், துவக்கப்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்திலும், ஐந்தாண்டுகளில் பெருமிதப்படும் அளவுக்கு பெரிய வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடந்து விடவில்லை. சிறுசிறு கோரிக்கைகளை நிறைவேற்றியதை ரயில்வே அதிகாரிகள் பெரிதாகப் பேசுகின்றனர்.கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் என முக்கியமான தொழில் நகரங்களின் எம்.பி.,க்கள் இங்கிருந்தும், அவர்களுக்குள் ஒருமித்த கருத்து, ஒருங்கிணைந்த முயற்சி இல்லாததால், இந்த கோட்டத்தில் நடக்க வேண்டிய பல்வேறு வளர்ச்சிப்பணிகளும் ஆண்டுக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டின்போது, இந்த எம்.பி.,க்கள் சில கோரிக்கைகளை வைப்பதும், அவை புறக்கணிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதன்பின், இந்த கோரிக்கைகளை எம்.பி.,க்களும் தொடர்ச்சியாக வலியுறுத்துவதில்லை. இந்த எம்.பி.,க்களின் கருத்துக்களை அறிந்து, அதற்கேற்ப திட்டம் வகுக்க ரயில்வே அமைச்சர்களும் முயற்சிப்பதில்லை.அபூர்வமாக, இந்த ஆண்டில் தெற்கு ரயில்வே சார்பில் ஒவ்வொரு கோட்டத்திலும் எம்.பி.,க்களின் கருத்துக்களைக் கேட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி கோட்டத்துக்கான கூட்டம், காரசாரமாக நடந்து முடிந்துள்ளது; சென்னை மற்றும் சேலம்கோட்டங்களுக்குட்பட்ட எம்.பி.,க்களுக்கான கூட்டம், நவ.16ல் சென்னையில் நடக்கவுள்ளது.
சென்னை கோட்டத்தைப் பொறுத்தவரை, தெற்கு ரயில்வேயின் தலைமையிடம் என்பதால், அங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகளை ரயில்வே அதிகாரிகளே திட்டமிட்டு முடித்து விடுகின்றனர். சேலம் கோட்டத்தில்தான், ரயில்வே திட்டங்களை எம்.பி.,க்கள் இழுத்து வர வேண்டிய கட்டாயம் உள்ளது.தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில், சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்று, ரயில்வே திட்டங்களை வலியுறுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொழில் வளம் மிக்க நகரங்களையுடைய இக்கோட்டத்தில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்தினால் வருவாய் அதிகரிக்குமென்பதை எம்.பி.,க்கள் விளக்குவது அவசியம்.உதாரணமாக, கோவை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கம், கேரள ரயில்களை கோவைக்குத் திருப்புவது, மெட்ரோ ரயில் திட்டம், பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை கோவை, பொள்ளாச்சி மற்றும் நீலகிரி எம்.பி.க்கள் வலியுறுத்தலாம்; திருப்பூர் எம்.எல்.ஏ.,வும் இதற்காக குரல் கொடுக்கலாம்.
ஆனால்,இந்த கூட்டத்தில் எத்தனை எம்.பி.,க்கள் கலந்து கொள்வார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கோவை எம்.பி., நடராஜன், டில்லியில் இருப்பதால் வர முடியாது என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது.
பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் எம்.பி.,க்கள், இக்கூட்டத்தில் பங்கேற்பார்களா, அப்படியே பங்கேற்றாலும் கோரிக்கைகளை தெளிவாக விளக்குவார்களா என்பது கேள்விக்குறி.
எம்.பி..க்கள் ராசா (நீலகிரி), செம்மலை (சேலம்), தம்பிதுரை (கரூர்), காந்திச்செல்வன் (நாமக்கல்), கணேசமூர்த்தி (ஈரோடு) ஆகியோர் விஷயம் அறிந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் அரசியல் நிர்ப்பந்தங்கள், அவர்களை இதில் பங்கேற்க விடுமா என்பது சந்தேகமே. தொகுதி மீதான இவர்களின் அக்கறை, எப்படியும் நாளை மறுநாள் தெரிந்துவிடும்.