Indian Railways News => Topic started by RailXpert on Dec 13, 2012 - 00:00:24 AM


Title - DISTRICT NEWS | சென்னையிலிருந்து மதுரைக்கு டிச., 15 முதல் துரந்தோ எக்ஸ்பிரஸ் இயக்கம் Dinamalar
Posted by : RailXpert on Dec 13, 2012 - 00:00:24 AM

சேலம்: சென்னையில் இருந்து, மதுரை மற்றும் திருவனந்தபுரத்துக்கு, டிசம்பர், 15ம் தேதி முதல் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் - மதுரை, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே புதிய துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று, 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. டிசம்பர், 15ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இரண்டு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
* சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22205) திங்கள் மற்றும் புதன்கிழமை தோறும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு, 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7 மணிக்கு மதுரை சென்றடையும்.
மறு மார்கத்தில், மதுரை - சென்னை சென்ட்ரல் துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22206) செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இரவு, 10.40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறு நாள் காலை, 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில், சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இயக்கப்படும்.
பராமரிப்பு பணிக்காக, ஈரோடு ரயில் நிலையத்தில் நிற்கும் போது, பயணிகள் அங்கு இறங்கி கொள்ளலாம். ஆனால், துரந்தோ எக்ஸ்பிரசுக்கு ஒரே கட்டணம் மட்டும் நிர்ணயிக்கப்படுவதால், முழு தொகையும் செலுத்த வேண்டும்.
* சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22207) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் மாலை, 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 5.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 22208) புதன் மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு, 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் பராமரிப்பு பணிக்காக, ஜோலார்பேட்டை, பாலக்காட்டில் நிறுத்தப்படும். பயணிகள் அங்கு இறங்கி கொள்ளலாம். துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முழு கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.