Indian Railways News => Topic started by riteshexpert on Nov 22, 2012 - 03:00:19 AM


Title - சென்னை மதுரை தூரந்தோ உள்பட 16 புதிய ரெயில்கள் விரைவில் இயக்கம்: மந்திரி பவன்குமார் பன்சால் தகவல் ||
Posted by : riteshexpert on Nov 22, 2012 - 03:00:19 AM

புதுடெல்லி, நவ. 21-

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 2 தூரந்தோ ரெயில்கள் உள்பட 16 புதிய ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதில் 4 ரெயில்கள் 2011-12 பட்ஜெட்டிலும், 12 ரெயில்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டவையாகும்.

இதுதொடர்பாக ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 16 ரெயில்கள் சேவை அடுத்த 10 நாட்களில் தொடங்கப்படும். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரெயில்களான சென்னை-மதுரை தூரந்தோ, சென்னை திருவனந்தபுரம் தூரந்தோ, ஜெய்ப்பூர்-ஆக்ரா சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இந்த மாதம் கொடியசைத்து துவக்கி வைக்கப்படும்.

நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி பாரக்பூர்-அசம்கார் எக்ஸ்பிரஸ், சாப்ரா-மண்டுவாதிஹ் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-சென்னை எக்ஸ்பிரஸ், கரீம்நகர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் ஆத்ரா-பிஷ்னுபூர், ஆத்ரா-அசோன்சோல் ஆகிய பயணிகள் ரெயில்கள் உள்ளிட்ட ரெயில்களும் விரைவில் இயக்கப்பட உள்ளன. மேலும் டெல்லி-லூதியானா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மோகா வரை நீட்டிக்கப்படுகிறது.

ரெயில்வேயில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் இப்போது 1.2 லட்சம் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன. மற்ற பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிக்கெட் வழங்கும் நடைமுறைகள் இன்னும் எளிமையாக, தொந்தரவு இல்லாத வகையிலும் அமைய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வினை உருவாக்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.