Indian Railways News => Topic started by Mafia on Nov 19, 2012 - 06:00:49 AM


Title - TN govt share in railway projects | ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு பங்களிப்பு : கலந்தாய்வு கூட்டத
Posted by : Mafia on Nov 19, 2012 - 06:00:49 AM

மதுரை: "ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற, தமிழக அரசு பங்களிப்பு தேவை,' என, மதுரையில் தொழில் வர்த்தக சங்கம் நடத்திய ரயில்வே திட்டங்கள் குறித்த கலந்தாய்வில் வலியுறுத்தப்பட்டது. இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள, 10 எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஒருவர் கூட பங்கேற்கவில்லை. கூட்டம் முடியும் தருவாயில், நெல்லை காங்., எம்.பி., ராமசுப்பு வந்தார். ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய பலரும் வலியுறுத்தினர்.

என்.ஜெகதீசன், வர்த்தக சங்க தலைவர்: ஆயிரத்து 137 கோடி ரூபாய் மதிப்பிலான விழுப்புரம்-திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு ரூ.60 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால், திட்டத்தை விரைந்து முடிக்க இயலாது. நடப்பிலுள்ள திட்டங்கள், புதிய ரயில் பாதைகளை அமைக்க, மாநில அரசு பங்களிப்பு அவசியம்.

எஸ்.ரத்தினவேலு, சங்க முதுநிலை தலைவர்: மத்திய அரசு பட்ஜெட் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. இதில் 50 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினால் மட்டும் ரயில்வே திட்டங்களை முடிக்க இயலும். கேரளா, ஆந்திராவில் ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு 30 சதவீத நிதி ஒதுக்கீடு வழங்குகிறது. தமிழக அரசும் ரயில்வேக்கு தனி அமைச்சர் நியமித்து, ரயில்வே பணிகளை கண்காணித்து, துரிதப்படுத்த வேண்டும்.

ராமசுப்பு, நெல்லை எம்.பி.,: மதுரை-குமரி இரட்டை பாதை திட்டத்தை விரைந்து முடிக்க லோக்சபாவில் வலியுறுத்துவேன். ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் விபத்தை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரயில்களை இயக்க தேவையான பெட்டிகள் இல்லை. கேரளாவில் சில பகுதிகளில் மூன்று கி.மீ., இடைவெளியில், ரயில் நிறுத்தங்கள் உள்ளன. அந்தளவு இல்லாத பட்சத்திலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முக்கிய ஸ்டேஷன்களில் நின்று செல்ல வேண்டும்.

சுந்தரராஜன் எம்.எல்.ஏ.,: சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும், பெரியகுளம், மேலூர் பகுதியில் ரயில் போக்குவரத்து இல்லை. மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் ஒன்றுபட்டு, ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை கேட்டு பெறுகின்றனர். தமிழக எம்.பி.,க்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு ரயில்வே திட்டங்களுக்கு நிதி கிடைக்க செய்ய வேண்டும்.

ராம்பாபு, முன்னாள் எம்.பி.,: ரயில்வே, விமான, கப்பல், சாலை போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதன் மூலம், தொழில் வளர்ச்சி பெற முடியும். குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த, தொழில் நுட்ப வல்லுனர் குழு செல்ல இருக்கிறது. மதுரை-குமரி இரட்டை பாதை, மதுரை-போடி அகல பாதை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

ஏ.கே.ரஸ்தோகி, ரயில்வே கோட்ட மேலாளர்: திண்டுக்கல்-பழநி இடையே நவ., 20 முதல் காலை 5.50, மதியம் 1.00, மாலை 5.30க்கு பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் இயங்கும். மானாமதுரை-விருதுநகர் அகல பாதை பணிகள் வரும் ஜன., 31க்குள் முடிக்கப்படும். பிப்., முதல் ரயில்கள் இயக்கப்படும். மதுரை ஸ்டேஷனில் ஆறு "எஸ்கலேட்டர்கள்' டிசம்பருக்குள் செயல்பட துவங்கும். செங்கோட்டை-புனலூர் வழித் தடத்தில் மலைக்குகைகள் உள்ளதால், அவற்றை குடைய வேண்டியுள்ளது. இப்பாதை, 2015ல் அகல பாதையாக மாற்றப்படும். மதுரை-போடி அகல பாதை பணிகளுக்கான மறுமதிப்பீடு, வாரிய ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த தொழில், வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் பேசினர்.

"நீங்க இப்ப சொன்னா முதல்வர் கேட்பாங்க' : சமீபத்தில் முதல்வர் ஜெ.,யை சந்தித்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சுந்தரராஜன், கட்சி கரையில்லாத வேட்டியுடன் பங்கேற்று, ""ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற சட்டசபையில் வலியுறுத்துவேன்,'' என்றார். அவருக்கு நன்றி தெரிவித்த வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ""நீங்க இப்ப சொன்னா முதல்வர் ஜெ., கேட்பாங்க. ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீட்டை வலியுறுத்துங்க,'' என குறிப்பிட, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மற்ற மாநிலங்களை போல, எம்.பி.,க்கள் கட்சி வேறுபாடுகளை களைந்து, ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்த போது, குறுக்கிட்ட சுந்தரராஜன்,""முதல்வரை சந்தித்து தொகுதி பிரச்னை குறித்து மனு கொடுத்ததே பிரச்னையாகி விட்டது,'' என்றார்.